தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் பல வீதிகளும் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஊடாக வட்டக்கச்சி செல்லும் பண்டன்கல் கண்டி வீதி இரணமடு குளத்தின் மேல் அதிக நீர் வெளியேற்றப்படுவதன் காரணமாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏ 35 பரந்தன் முல்லைத்தீவுக்கான பிரதான வீதி கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பாலத்தில் வெள்ள நீர் வீதியை குறுக்கறுத்து ஓடுவதன் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சிக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தினர் மற்றும் கடல் படையினருடன் கண்டாவளை பிரதேச செயலாளர் இணைந்து பெரியகுளம் பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு படகுகள் மூலம் அவர்களை ஏற்றி அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக நேரடியாக வெள்ள பாதிப்புகளை 2500 க்கும் மேற்பட்டவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
அத்துடன் பெருமளவானோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கான சமைத்த உணவை வழங்கும் நடவடிக்கைகள் பிரதேச செயலங்கள் மற்றும் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

