கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி நிதி மீளாய்வுக் குழுக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நடப்பாண்டிற்கான இறுதி நிதி செயற்பாட்டு முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று(11) காலை 9.00மணிக்கு நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில் : பல்வேறு அமைச்சுக்களின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வருகிறோம். இவ் வருடம் அதிகமான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அதனை வினைத்திறனாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.
மேலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக அது சார்ந்த செயற்றிட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுவருகின்ற நிலையில், சரியான முறையில் பொது மக்களுக்கு போய்ச்சேரும் வகையில் நிதி நடவடிக்கைகளை வினைத்திறனுடன் உரிய காலப்பகுதிக்குள் முடிவுறுத்தவேண்டும். இதனை விட தற்போது அனர்த்த பாதிப்பு நிலைமைகள் தொடர்பில் செயலி ஊடாக கோரப்படும் தகவல்களை உரிய நேரத்தில் சரியான முறையில் வழங்குவதன் ஊடாகவே அடுத்த வருடத்தில் அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளைப் பெற முடியும். இதுகுறித்து அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது இடரான காலப்பகுதியென்பதால் மேலதிக நிதிகளை 25ம் திகதிக்குள் பெற முடியும். இவ்வாண்டுக்குள் அனைத்தையும் பூர்த்திசெய்ய வேண்டும். அடுத்த வருடத்துக்கு கொண்டுசெல்ல முடியாது. எனவே ஒட்டுமொத்தத்தில் நடப்பாண்டுக்கான நிதி நடவடிக்கைகளை விரைவாக சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்குக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் க.சி கஜேந்திரன் மாவட்டத்தின் நிதி விடயம் சம்பந்தமாக விளக்கமளித்தார்.
தொடர்ந்து மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்த திணைக்களங்களினது நிதி செலவீன தலைப்புக்களின் கீழ் கிடைக்கப்பெற்ற ஒதுக்கீடுகள் அவற்றின் நிதி செயற்பாட்டு தற்போதைய நிலைகள் தொடர்பாக அந்தந்த கணக்காளர்களால் விளக்கமளிக்கப்பட்டதுடன், நிதி முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், திணைக்களங்களின் மாவட்ட இணைப்பாளர்கள், விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக கணக்குக் கிளை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *