பொங்கல் விழா நிகழ்வு இன்று(28) வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இன மத நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுதாகரன் தலைமையில் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
கோறளைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட பொது அமைப்புக்களான சனசமூக நிலையங்கள் பொது நூலகங்கள் முன் பள்ளிகள் மற்றும் முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இன்று பொங்கல் விழா நிகழ்வு இடம்பெற்றது.
சூரிய பகவானுக்கு நன்றியைத் தெரிவிக்கும் முகமாக புதுப்பானையில் பூத்தரிசி இட்டு பொங்கல் வைத்து
சூரிய பகவானுக்கு நன்றியைத் தெரிவித்தனர்.
இதன்போது அதிதிகள் எல்லோரும் மலர் மாலை அணிவித்து கலாசார நிகழ்வுடன் விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
கோலம் போடும் போட்டி நிகழ்வு இடம்பெற்றதுடன் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கலாசார நிகழ்வு மற்றும் நூலக சேவையில் சாதனை படைத்த நூலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் நூல்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைக சின்னம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
முன்னாள் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சித்திரவேல் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
சனசமூக நிலைய உத்தியோகஸ்தர் காரூன் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக சர்வமத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் றிப்கா அகமட் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
விசேட அதிதிகளாக உப தவிசாளர் பத்மநீதன், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர், மீராசாஹிப் ஹலால்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

