புதிய கல்வி சீரமைப்புக்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றவர்களுக்கு சரியான புரிதல் இல்லை – பிரபு

இந்த நாட்டில் புதிய ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போன்று புதிய கல்வி சீரமைப்பு ஊடாக புதிய மாற்றங்களை நாம் உருவாக்க இருக்கின்றோம். இந்த புதிய கல்வி சீரமைப்பு தொடர்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றவர்களுக்கு சரியான புரிதல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பு உல்லாச விடுதி மண்டபத்தில் இன்று(01) ஆரோ 360 நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தேவநாயகம் நிறோசன் தலைமையில் இடம்பெற்ற ஆரோ 360 டிஜிட்டல் இலத்திரனியல் செயலியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில்.

எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்னர் பல ஊழல் மோசடிகள் நிறைந்த ஒரு நாடாகக் காணப்பட்டது. இப்போது நாங்கள் இந்த ஊழல் மோசடிகள், இலஞ்ச ஊழல்களை வெகுவாகக் குறைத்து வருகிறோம். ஊழல் மோசடி குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டிருக்கிறது. வெகு விரைவில் இந்த நாட்டில் ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையினை செய்து வருகிறோம்.

டிஜிட்டல் மயமாக்கல் தொழில்நுட்பம் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு கொள்கையாக இருக்கின்றது. எமது அரசாங்கம் டிஜிட்டல் பொருளாதாரம் எனும் ஒரு அமைச்சினை உருவாக்கி அதனூடாக பல நல்ல விடயங்களை முன்னெடுத்து வருகின்றது. அதில் விசேடமாக கோபே என்ற அப்பினையும் உருவாக்கியுள்ளோம்.

தற்போது வீட்டில் இருந்தவாறே  அரச துறைக்கான கட்டணங்களைச் செலுத்தி தமக்கான சேவையினைப் பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கான தொழில்நுட்ப வசதியை எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

அது மட்டுமல்லாது உங்கள் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழினைக் கூட வீட்டில் இருந்தவாறு பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப வசதியை நாம் தற்போது ஏற்படுத்தியுள்ளோம்.

அதனையும் தாண்டி தற்போது போக்குவரத்துப் பொலிஸாரின் தண்டப்பணங்களைக் கட்டுவதற்காகவும்  டிஜிட்டல் மயமாக்கல் உருவாக்கியுள்ளோம்.

எம்மை அண்மித்த இந்தியா போன்ற நாடுகளில் புதிய தொழில்நுட்பங்களின் ஊடாக தங்களது சேவைகளை விஸ்தீரணம் செய்திருக்கின்றார்கள். பொருளாதார ரீதியாக அந்த நாடுகள் முன்னேற்றம் காண்பதற்கு அந்த தொழில்நுட்பமும் முக்கிய வகிபாகம் கொண்டுள்ளது.

அதனைப் போன்று நாங்களும் எமது நாட்டில் இவ்வாறான தொழில்நுட்ப முறைமைகளைக் கையாண்டு நாட்டை ஒரு வளர்ச்சிப் பாதைக்கு மாற்றுவதுதான் எமது நோக்கமாக இருக்கிறது.

இன்று எமது அரசால் புதிதாக உருவாக்கியிருக்கின்ற கல்வி சீர்திருத்தம் தொடர்பான விடயம் ஒரு பேசு பொருளாகக் கொண்டு வருகிறது.

இந்த நாட்டில் புதிய ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போன்ற கல்வி முறையிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எமது அரசின் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது.

உலகளாவிய ரீதியில் ஒரு வளர்ச்சிப் பாதையில் அந்தந்த நாடுகள் முன்னேறி வருவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது கல்வித்துறை, அந்த கல்வித்துறையின் ஊடாக பல விடயங்களை அந்த நாடுகள் முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்றது. அவ்வாறாக அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு கல்வித்துறை தான் மிக முக்கிய பங்காற்றி வந்துள்ளது.

அதைப் போன்றுதான் நாங்களும் இந்த கல்வி சீரமைப்பை உருவாக்கியுள்ளோம். கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் பல கல்வி சீர்திருத்தங்கங்களை உருவாக்கியிருந்தார்கள்.

ஆனால் அவை அனைத்தும் இறுதியில் தோல்வி கண்ட விடயங்களாகவே அமைந்திருந்தது. ஆனால் எங்களது பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற கல்வி சீரமைப்பானது விசேடமாக பல நல்ல விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

நவீன முறைமையிலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதே பழைய மனப்பாடம் பண்ணும் முறைமையினைக் கொண்டு ஒரு பரீட்சை ஒன்றை எழுதி சித்தியடைந்து தொழிலிற்காக செல்லும் போது அவர்களால் சரியான இலக்கை அடைய முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த புதிய கல்வி சீரமைப்பின் ஊடாக புதிய மாற்றங்களை நாம் உருவாக்க இருக்கின்றோம். தொழில் ரீதியாக அவர்கள் தங்களது கல்வியை நிறைவு செய்து செல்லும்போது ஒரு தொழில் வல்லுணர்களாக செல்லக்கூடிய விதமாக இந்த கல்வி சீர்திருத்தம் அமைந்திருக்கின்றது.

சிறந்த பல நல்ல விடயங்களை நாங்கள் சேர்த்துள்ளோம். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பவர்கள் அதில் இருக்கும் சொற்பதங்களைத்தான் தவறிழைத்துள்ளது போன்று எதிர்ப்பினை தெரிவிக்கின்றார்களே தவிர அவர்களுக்கும் சரியான புரிதல் இல்லை என்பதைத்தான் நான் கருதுகின்றேன். எனவே இந்த நல்லதொரு விடயத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து இந்த புதிய மாற்றத்தினை உருவாக்க முன்வர வேண்டும். அதுவே எமது இலக்காகவும் அமைந்திருக்கின்றது என்றார்.

இந்த நிகழ்வில் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை உறுப்பினர்களான துதீஸ்வரன், செல்லப்பெருமாள் வணிதா மற்றும் எஸ்.பி.எம் நிறுவனத்தின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *