திருகோணமலை கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை அமைத்த விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 சந்தேகநபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று(09) உத்தரவிட்டது.
நீதவான் எம். எஸ். எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்களுக்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதற்குச் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் மறுப்புத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடந்த 2025 நவம்பர் 16ஆம் திகதி, திருகோணமலை கடற்கரை ஓரத்தில் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான நிலத்தில், எவ்வித சட்டபூர்வ அனுமதியுமின்றி புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பாதிப்பதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இன்றைய விசாரணையை முன்னிட்டு நீதிமன்றச் சூழலில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

