வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கான 2026ஆம் ஆண்டின் முதலாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(12) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றது.

கூட்டத்தில் பிரதேச மக்களின் நலன்சார் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றில், கிராம வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வாழைச்சேனை சேகு இப்றாஹீம் வீதி 6 மில்லியன் ரூபா மற்றும் பிறைந்துரைச்சேனை அல் அக்‌ஷா வீதி 4 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டது.

காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வாக தியாவட்டவானில் வனஜீவராசிகள் திணைக்கள காரியாலயம் அமைத்தல், ரிதிதென்ன மற்றும் ஜெயந்தியாய கிராம எல்லைகளில் யானை வேலி அமைத்தல் ஆகியவை முன்வைக்கப்பட்டன.

சுகாதாரத் தேவைகளை கருத்தில் கொண்டு தியாவட்டவானில் ஆரம்ப மருத்துவ சிகிச்சைப் பிரிவு அமைத்தல் மற்றும் ரிதிதென்ன ஆரம்ப மருத்துவ சிகிச்சைப் பிரிவை தரமுயர்த்தல் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது, திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காணும் செயன்முறை உருவாக்குதல், தியாவட்டவான் கிராமத்திற்கான குடிநீர் திட்டத்தை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக ஆரம்பித்தல் ஆகிய விடயங்களும் கவனிக்கப்பட்டன.

கல்வி தொடர்பாக அந்நூர் தேசிய பாடசாலை மற்றும் மாவடிச்சேனை இக்பால் வித்தியாலயத்தின் தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், ஓட்டமாவடி – வாழைச்சேனை பிரதான வீதிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போக்குவரத்து திணைக்களத்துடன் இணைந்து பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதேச சபை தவிசாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பதிகாரி யூ.கே.எம். அப்துல்லாஹ், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *