நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிப்பு

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

இன்று (19) பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

மேலும், வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.

 

 

காற்று நிலைமையைப் பொறுத்தமட்டில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *