“காலநிலையை வென்று விளைச்சலை பெருக்குவோம்” என்ற தொனிப்பொருளில் வயல் விழா ஒன்று கிளிநொச்சி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம், வட்டக்கச்சியில் நடைபெற்றது.
மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் வி. சோதிலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் தட்சணாமூர்த்தி யோகேஸ்வரன், மாவட்ட உதவி விவசாயப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) எஸ். இராஜேஸ்கண்ணா, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கே. பிரகாஸ், மாவட்ட கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பரந்தன் விவசாயக் கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
வயல் விழாவில் நெல் மற்றும் பயிர் செய்கையின் புதிய முறைகள், வீட்டு தோட்டம் மற்றும் உயிர் உர உற்பத்தி, நீர்ப்பாசன மற்றும் மண் பரிசோதனை, காளான் உற்பத்தி மற்றும் பெருமதிசேர் நடவடிக்கைகள், தேனீ வளர்ப்பு மற்றும் இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், விவசாய இயந்திரக் காட்சி, சிறுதானிய மற்றும் ஆரோக்கிய உணவுக் கண்காட்சி, செய்கைக்கான ஏற்ற ரகங்கள், பயிர் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, சேமிப்பு தொழில்நுட்பங்கள், கூட்டெரு தயாரிப்புகள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டன.
இதனுடன், விவசாயிகளுக்கான அரச உதவித் திட்டங்கள், வங்கி கடன் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டதுடன், விவசாயிகள் மற்றும் நிபுணர்கள் இடையிலான கலந்துரையாடல், நேரடி களப் பயிற்சிகள், பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும் இடம்பெற்றன.

