பொகவந்தலாவில் இடம்பெற்ற துயரகரமான பேருந்து விபத்தில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (20) காலை சுமார் 9.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தொன்றை இயக்கத்தில் வைத்துவிட்டு அதன் சாரதி கீழே இறங்கியுள்ளார். இந்நிலையில், பேருந்தின் தடையாளி (பிரேக்) சரிவர செயல்படாத காரணத்தால் பேருந்து முன்னோக்கி நகர்ந்து, அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞன் மீது மோதியுள்ளது.
இதனால் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் 28 வயதுடைய புஷ்பகுமார சிந்துஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நோர்வூட் சென்ஜோன் டிலரி மேல்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்தவராகவும், திருமணத்திற்குப் பின்னர் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் வசித்து வந்தவராகவும் தெரிவிக்கப்படுகிறது.
குழாய் நீர் அகழும் வேலைத்திட்டம் தொடர்பாக தனது குழுவினருடன் வவுனியாவிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு சென்றிருந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

