கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தலை பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ளது.
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போனது அல்லது திருடப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் தினசரி பதிவாகின்றன. குறிப்பாக, ஒரு கையடக்கத் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டு வேறு ஒருவரின் கைக்குச் சென்றாலோ, அதன் மூலம் பல்வேறு சட்டவிரோத மற்றும் சமூக விரோத செயல்கள் இடம் பெறக்கூடிய அதிக வாய்ப்புகள் உள்ளன.
நிதி தகவல்கள், தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட நுணுக்கமான தகவல்கள் அடங்கிய கையடக்கத் தொலைபேசி தவறான கைகளில் சென்றால், குற்றவாளிகள் அதனை தவறாக பயன்படுத்தி தங்கள் நோக்கங்களை எளிதில் நிறைவேற்றக்கூடும். இதனால், உரிமையாளர்கள் கூட பாதிக்கப்பட்டவர்களாக மாறும் அபாயம் உள்ளது.
அதனால், கையடக்கத் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம்:
1. சிம் அட்டையை உடனடியாக செயலிழக்கச் செய்தல்
சிம் அட்டையை வழங்கிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மூலம் இதை மேற்கொள்ளலாம். இதன் மூலம் மூன்றாம் தரப்பினரால் சட்டவிரோத பயன்பாடுகளைத் தடுப்பதுடன், தொலைபேசியை மீண்டும் கண்டுபிடிப்பதும் எளிதாகும்.
2. IMEI இலக்கத்தை குறிப்பிட்டு பொலிஸில் முறைப்பாடு செய்தல்
கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போனாலோ அல்லது திருடப்பட்டாலோ, இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்யும் போது IMEI இலக்கத்தை குறிப்பிடுவது மிகவும் முக்கியமானதாகும்.
3. IMEI இலக்கத்தை முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருத்தல்
கைபேசியின் IMEI இலக்கத்தை அறிய *#06# என்ற குறியீட்டை பயன்படுத்தலாம். அந்த இலக்கத்தையும் சேவை விவரங்களையும் முன்கூட்டியே பதிவு செய்து பாதுகாப்பாக வைத்திருப்பது ஒவ்வொரு பயனரின் பொறுப்பாகும்.
4. I Need முறைமையின் பயன்பாடு
இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்திய மென்பொருள் முறைமையின் மூலம் காணாமல் போன கைப்பேசிகளைத் தேடும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக www.ineed.police.lk இணையதளத்தில் பதிவு செய்து தேவையான தகவல்களை வழங்கலாம். தகவல் கிடைத்தவுடன் இலங்கை பொலிஸ் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
மீட்பு தொடர்பான தகவல்கள்:
2024 ஆம் ஆண்டில் காணாமல் போன 2,796 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதே ஆண்டில் திருடப்பட்ட 928 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
2025 ஆம் ஆண்டில் காணாமல் போன 2,355 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டதுடன், திருடப்பட்ட 1,019 தொலைபேசிகள் தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட அறிவுறுத்தல்:
தமக்கு சொந்தமில்லாத ஒரு பொருளை வைத்திருப்பது இலங்கை தண்டனைச் சட்டத்தின் படி குற்றமாகும். இதற்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும், திருடப்பட்ட கைப்பேசி அல்லது பிற பொருட்களை குறைந்த விலையில் வாங்கி வைத்திருப்பதும் குற்றமாகும்; அதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ஒருவருக்கு சொந்தமில்லாத பொருள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பொலிஸ் அதிகாரியிடமோ ஒப்படைத்து உரிய பதிவு அல்லது ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
புதிய கையடக்கத் தொலைபேசி வாங்கும் போது கவனம்:
புதிய கையடக்கத் தொலைபேசியை வாங்கும் போது | Need System இன் “Find Genuine Phone” வசதியின் மூலம், அது திருடப்பட்டதா அல்லது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதா என்பதை சரிபார்க்கலாம்.
எனவே, எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசிகளை வாங்கும் போது அதன் மூலமும் விற்பனை செய்யும் இடமும் குறித்து பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறு இலங்கை பொலிஸ் அறிவுறுத்துகிறது.

