வடக்கு–கிழக்கின் வளங்களையும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியையும் வெளிச்சமிடும் நூல் வெளியீடு கிளிநொச்சியில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவையின் ஆதரவுடன், “வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும்” எனும் நூலின் வெளியீட்டு விழா கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அமரசிங்கம் கேதீஸ்வரன் எழுதிய இந்நூல், எழுநா வெளியீடாக வெளிவந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, ஓய்வுநிலை பாடசாலை முதல்வர் சி. பாலகிருஷ்ணன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். எஸ். உதயகுமார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் த. கணேசலிங்கம், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் இ. த. ஜெயசீலன், கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தன் பூநகரி பிரதேச செயலாளர் மு. ஆயகுலன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நூல் வெளியீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எஸ். எஸ். உதயகுமார் நிகழ்த்தியதுடன், நூல் மதிப்பீட்டுரையை அரசறிவியல்துறை முன்னாள் துறைத் தலைவரான பேராசிரியர் த. கணேசலிங்கம் வழங்கினார்.
மேலும் கவிஞர்கள், படைப்பாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆர்வலர்களும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

