சிறுமி கடத்தல் வழக்கு; வர்த்தக நிலைய பணியாளர் விளக்கமறியலில்

கல்முனை பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய ஆடை விற்பனை நிலைய பணியாளரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 3 ஆம் திகதி இரவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் மறுநாள் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனையடுத்து கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளில் தெரியவந்ததாவது, ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞருக்கும், அங்கு வாடிக்கையாளராக சென்றிருந்த சிறுமிக்கும் கடந்த இரண்டு மாதங்களாக தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு இருந்து வந்துள்ளது.

சம்பவ தினத்தன்று இரவு, சந்தேகநபர் வாடகை வேனில் மற்றொருவருடன் சிறுமி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று, தொலைபேசி மூலம் வெளியே வருமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அம்பாறை மாவட்டத்தின் ஒரு பகுதியில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்குப் பின்னர் சிறுமி பொலிஸ் நிலையத்தை அணுகி முறைப்பாடு செய்ததையடுத்து, 25 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். மேலும் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 56 வயதுடைய மற்றொரு சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வழக்கு கல்முனை நீதிவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதான சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *