மியாவாக்கி வனத் திட்டத்தின் மூலம் புதிய பசுமை பயணம் ஆரம்பம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் “மியாவாக்கி வனத் திட்டம்” மரநடுகை நிகழ்வு நேற்று நடைபெற்றது.

 

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையிலும் ஒழுங்கமைப்பிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் திரு. என். தனஞ்சயன் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டார். மேலும், உதவி பிரதேச செயலாளர்கள் திருமதி. லக்ஷன்யா பிரசாந்தன், திருமதி. சுபா சதாகரன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

இயற்கையைப் பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கவும், எதிர்கால சந்ததிக்கு பசுமையான சூழலை உருவாக்கவும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறைந்த பரப்பளவில் வேகமாக அடர்ந்த வனத்தை உருவாக்கும் ஜப்பானிய மியாவாக்கி முறையின் கீழ், 100 நேரங்களில் 30 அடி நிலப்பரப்பில் 783 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. இயற்கை அமைப்பின்படி, இம் மரங்கள் தம் நிலைத்திருப்பிற்காகப் போட்டியிட்டுக்கொண்டு அதிவேகமாக வளரும் விசேட காடாக்க முறையை இத்திட்டத்தில் காண முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 

“இன்று நட்ட ஒரு மரம் நாளைய தலைமுறையின் உயிர் மூச்சாகும்” என்ற செய்தியை முன்னிறுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வும் இதன்போது ஏற்படுத்தப்பட்டது. பசுமை நிறைந்த எதிர்காலத்தை நோக்கி எடுக்கப்பட்ட இந்த முயற்சி, இயற்கையுடனான மனிதனின் உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான அடையாளமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *