கொழும்பில் இருந்து பதுளை நோக்கி இன்று(27) அதிகாலை பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று தியத்தலாவ பகுதியில் விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து நேரத்தில் பேருந்தில் 42 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, பேருந்தின் பிரேக் திடீரென செயலிழந்ததால் சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், இதையடுத்து பேருந்து வீதியை விட்டு விலகி இரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக அப்பகுதி மக்கள், காவல்துறையினர் மற்றும் அவசர மீட்புப் பிரிவினர் இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.
பேருந்து ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்துள்ளதால், அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்தை அகற்றி தண்டவாளத்தை வழமைக்குக் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

