மட்டக்களப்பில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையானை பாதுகாப்பு காரணங்களால் நீதிமன்றத்திற்கு அழைத்து வர முடியவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.
இதையடுத்து, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையிலிருந்து காணொளி தொழில்நுட்பம் மூலம் நீதிமன்ற நடவடிக்கையில் இணைக்கப்பட்டார்.
2008 ஆம் ஆண்டு பொலிஸ் உத்தியோகத்தர், அரசியல் கட்சி உறுப்பினர் மற்றும் வர்த்தகர் உள்ளிட்ட ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோர் இந்த வழக்கின் சந்தேகநபர்களாக உள்ளனர்.
வழக்கு விசாரணையின்போது, இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களுடன் தொடர்புடைய கோணங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதுடன், வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் மற்றொரு சந்தேகநபரான “பாய்ஸ்” என்பவருக்கு எதிரான பிடியாணையும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் வகையில் உத்தரவிட்டார்.

