முன்னாள் போராளிகளுடன் கைகோர்க்கும் ஈரோஸ்

தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலிகள் கட்சி, ஈரோஸ் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அதன் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் மற்றும் க. இன்பராசா ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன், 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனித்த பின்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தாம் அரசியல் ரீதியாக காத்திருந்ததாகவும், 16 ஆண்டுகள் கடந்தும் தீர்வு கிடைக்காத நிலையில் மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் அரசியல் ரீதியாக களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் முன்னாள் போராளிகளுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

போராளிகளின் புனர்வாழ்வு, புனரமைப்பு, இருப்பிடம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பொது கட்டமைப்பை உருவாக்குவதே தமது நோக்கம் எனவும் தெரிவித்தார்.

மேலும், இணைந்த வடக்கு, கிழக்கில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும், எதிர்கால மாகாணசபைத் தேர்தலில் போராளிகள் போட்டியிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழ் மக்களின் காணிகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய க. இன்பராசா, முன்னாள் போராளிகளின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்காகவும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும்  தமிழ் மக்களின் காணிகளை காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அடிப்படையில் இன்று ஈரோஸ் கட்சி தலைவர் இ.பிரபாகரனுடன் புனர்வாழ்வு அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி ஒன்றினைந்து செயற்பட உடன்பாட்டிற்கு வந்துள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *