தெஹிவளை கைக்குண்டு சம்பவம்: மூவர் கைது!

தெஹிவளை பகுதியில் வீட்டிற்குள் கைக்குண்டு வீசி இரு சிறுவர்களைக் கொலை செய்து, அவர்களின் தந்தைக்குக் பலத்த காயம் ஏற்படுத்திய குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் மேல் மாகாணத் தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை  (17) ரிதீமாலியத்த, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவை ஆகிய பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 23, 30 மற்றும் 39 வயதுடையவர்களாவர்.

ரிதீமாலியத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், கடந்த ஆகஸ்ட் 01 ஆம் திகதி கல்கிஸ்ஸ, கந்தவல வீதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி  என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுவின் தலைவரால்  வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இக் குற்றச்செயல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேல் மாகாணத் தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *