சஹ்ரானுடன் எந்த தொடர்பும் இல்லை – ரிஷாட் பதியுதீன்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அண்மையில் வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சஹ்ரான் என்ற பயங்கரவாதியை நான் கண்டதுமில்லை; அவருடன் பேசியதுமில்லை” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நிந்தவூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் மேலும் தெரிவித்ததாவது:
“ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. சஹ்ரானின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முஸ்லிம் சமூகமோ, முஸ்லிம் அரசியல் தலைமைகளோ ஒருபோதும் ஆதரவாக இருந்ததில்லை.”
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் சமூகமும் தொடர்ச்சியாக தனது ஆதரவை வழங்கி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“என்னையும் இரவோடு இரவாக சிறையில் தள்ளினார்கள்!”
“சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைகளால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். அரசியல்வாதியாகவும் நானும் அதனால் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கின்றேன்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்த என்னை, சபாநாயகருக்குக் கூட அறிவிக்காமல் இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தனர்” என ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *