மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் புனித மிக்கேல் கல்லூரிக்கும் இடையிலான 2026ஆம் ஆண்டிற்கான “பாடு மீன்களின் சமர்” 50 ஓவர் கடினப்பந்து கிரிக்கெட் போட்டி, சனிக்கிழமை (19) புதிய கோட்டைமுனை விளையாட்டு மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
காலை 8.30 மணியளவில் கோலாகலமாக ஆரம்பமான தொடக்க விழாவில், முதன்மை விருந்தினராக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (M.P) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் ஏ.வீ. ஜோசப், 243 ஆவது படைப்பிரிவின் படைக்கட்டளை அதிகாரி கேனல் ஆர்.ஆர்.கே.ராஜபக்ஷ உடகே, மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பொறியியலாளர் என்.வீ.ரஞ்சன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மாலை 3:00 மணிக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், முன்னாள் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவரும் தேசிய அணியின் மட்டையடிப் பயிற்றுவிப்பாளருமான ஹஷான் பிரசந்த திலகரத்ன முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்குக் கிண்ணங்களை வழங்கிக் கௌரவித்தார்.
இந்நிகழ்வில் கூட்டுறவுப் பங்கான்மைச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் த.இராஜலிங்கம் ரூஷந்தன் மற்றும் டொக்டர் விஜயநாயகம துதிகரன் உட்படப் பல முக்கிய விருந்தினர்களும் பங்கேற்றனர்.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.
192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய புனித மைக்கேல் கல்லூரி அணி, மத்திய கல்லூரியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி, 61 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்படி, 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி, தொடர்ச்சியாக ஆறாவது முறையாகவும் “பாடுமீன்களின் சமர்” வெற்றிக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.
இப்போட்டியைப் பார்வையிட ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள், விளையாட்டு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்தில் திரண்டு அணிகளுக்குத் தங்கள் ஆதரவை வழங்கினர்.

