சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக இலங்கையிலுள்ள சவூதி அரேபியத் தூதுவர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளேன்.
அவரது விடுதலைக்காக செய்ய முடியுமான அதிகபட்ச தலையீடுகளை கட்சி, இனம், மதம், சாதி பேதமின்றி செய்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள சிவராசா அனோஜன் பேஸ்புக் ஊடாக செய்த தவறான கருத்துப் பரிமாற்றம் காரணமாக பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். அவரது விடுதலைக்காக எடுக்கக்கூடிய உச்சக்கட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.
எந்தத் தரப்பிலிருந்தாவது சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவருக்கு விடுதலை கிடைக்கும் வரை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இதற்காகக் குரல் கொடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சிவராசா அனோஜனுக்கு ஏற்பட்ட இந்தத் தவறுக்காக வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு நிவாரணம் வழங்கி, முழுமையான விடுதலையைப் பெற்றுக் கொடுக்குமாறு சவூதி அரேபியாவின் மன்னரிடம் கனிவாகவும், கௌரவமாகவும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திப்பதற்காக அனோஜனின் பெற்றோர் இன்று காலை கொழும்பிற்கு வருகை தந்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தனர். இவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கு மத்தியில், இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பான விடய விபரங்களைக் கேட்டறிந்தார்.
மேலும் சவூதி சிறையில் இருக்கும் சிவராசா அனோஜனுடன் எதிர்க்கட்சித் தலைவர் தொலைபேசி வழியாக பேசி அவரிடம் விடயங்களை கேட்டறிந்த பின்னர் நமது நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
சாதி, மத பேதமின்றி சிவராசா அனோஜனின் விடுதலைக்காக செய்யக்கூடிய உட்சபட்ச அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என இங்கு பெற்றோர் மத்தியில் தெரிவித்தார்.
இச்சந்தப்பில், சிவராசா அனோஜனின் தந்தையரான தம்பிராசா சிவராசா, தாயாரான இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரர் சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

