சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் கல்வி வலய சிறுவர் விளையாட்டு விழா

திருக்கோவில் கல்வி வலய மட்ட சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டு விழா, திகோ/விநாயகபுரம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மிகவும் விமர்சையாக நேற்றைய (26)தினம் நடைபெற்றது.

கல்வி முகாமைத்துவம் மற்றும் ஆரம்பக் கல்விக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச. அம்ஜத் கான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா. உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

விழாவிற்கு வருகை தந்த அதிதிகள், ஆரம்பப் பிரிவு மாணவர்களின் பேண்ட் வாத்தியக் குழுக்களினால் வரவேற்கப்பட்டு விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 52 அணிகள் இம்மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்றன.

மாணவர்களின் பங்குபற்றலே முதன்மையானது என்ற அடிப்படையில், போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர் குழுக்களும் வெற்றி மேடைக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை இவ்விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது.

அத்துடன், போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

திருக்கோவில் கல்வி வலய ஆரம்பப் பிரிவு அணியினரின் சிறந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பின் மூலம் இவ்விளையாட்டு விழா மிகவும் சிறப்பாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் நடைபெற்றது.

இதேவேளை, அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் திருக்கோவில் கல்வி வலயம் மாகாண மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 10ஆவது இடத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *