ஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் ‘குறைபாட்டுப் புள்ளி’ முறை

போக்குவரத்து விதிமீறல்களுக்கான ‘குறைபாட்டுப் புள்ளி’ (Demerit Points) முறையை நடைமுறைப்படுத்தும் ஆறு மாத முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (28) காலை போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், குறித்த முன்னோடித் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் இந்த ‘குறைபாட்டுப் புள்ளி’ முறையை அறிமுகப்படுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, வாகன சாரதிகளுக்கு இரண்டு வருட காலத்திற்கான குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகள் வழங்கப்படும். அவர்கள் மேற்கொள்ளும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஏற்ப அந்தப் புள்ளிகள் குறைக்கப்படும்.

மேலும், போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கான தற்போதைய இணையவழி கட்டண முறைகளை விரிவுபடுத்தி, டிஜிட்டல் கட்டமைப்பின் ஊடாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *