இலங்கையின் கடன் சுமையை நிர்வகிக்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் நிதி ஒழுக்க நடவடிக்கைகள் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபயசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு அமைவாக கடன் பொறுப்புகள் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், கடன் மீளச் செலுத்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் உள்நாட்டு கையிருப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளை அரசாங்கம் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும், முறையான பொருளாதார நிர்வாகத்தின் மூலம் எதிர்காலத்தில் கடன் செலுத்தல் தொடர்பான நெருக்கடிகளைத் தவிர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துக்கும் ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களுக்கும் இடையில் எதிர்மறையான தாக்கம் எதுவும் ஏற்படாது எனவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
அரச அதிகாரிகள் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுகள் காணப்பட்டால், பொதுமக்களும் ஊடகங்களும் தேவையான தகவல்களுடன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

