இன்றைய உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள மதுபான விற்பனைக்கான அனைத்து சுங்கவரி உரிமம் பெற்ற இடங்களையும் மூடுமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
மதுசாரப் பயன்பாடு காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 இலங்கையர்கள் அநியாயமாக உயிரிழப்பதுடன், அந்த ஆண்டின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 15,000 முதல் 20,000 வரை பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் சுட்டிக்காட்டுகிறது.
உலகளாவிய ரீதியிலும், மதுசாரத்தினால் ஆண்டுதோறும் அநியாயமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 03 மில்லியனாகும்.
உலகளவில் தடுக்கக்கூடிய மரணங்களில் பெரும்பாலானவை, அதாவது 10 இல் 8 மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே (NCDs) நிகழ்கின்றன. அந்தத் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய 4 ஆபத்துக் காரணிகளில் ஒன்றாக மதுசாரப் பயன்பாட்டைக் குறிப்பிடலாம்.
1980 – 1990 ஆம் ஆண்டு தசாப்தங்களில், உலக சுகாதார நிறுவனமும் (WHO) சர்வதேச மதுபான மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும் இணைந்து, பல்வேறு நோய்களுக்கு மதுசாரப் பயன்பாடே முக்கிய காரணம் என்பதை உலகிற்குச் சுட்டிக்காட்டின.
இதன் விளைவாக, 1988 ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகள் சில இணைந்து “மதுசாரமற்ற பிரச்சார வாரம்” (No Alcohol Campaign Week) எனும் சிறப்புத் திட்டத்தைத் தொடங்கின.
இத்திட்டத்திற்குப் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த பெரும் வரவேற்பு காரணமாக, இதனை ஆண்டுக்கு ஒரு நாளாகப் பிரகடனப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, மதுசார வியாபாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மிதமான தன்மையை ஊக்குவித்தல் மற்றும் மதுபானங்களில் இருந்து முற்றாக விலகியிருப்பதை நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி உலக மது ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

