யாழ். பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வென்று காரைதீவுக்குப் பெருமை சேர்த்த முகுர்த்தனா ரவீந்திரன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாள் நிகழ்வில், காரைதீவைச் சேர்ந்த செல்வி முகுர்த்தனா ரவீந்திரன், மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறையில் முதல் வகுப்புச் சிறப்புப் பட்டத்துடன் தங்கப்பதக்கத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 06.10.2026 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மின் மற்றும் மின்னணுப் பொறியியலில் (BSc Honours – First Class in Electrical and Electronic Engineering)முதல் வகுப்புச் சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட அவர், தனது பட்டப்படிப்பு துறையின் ஒட்டுமொத்தச் சிறந்த கல்விச் செயல்திறனுக்காக வழங்கப்படும்,(Best Overall Performance) தங்கப்பதக்கத்தையும் சுவீகரித்துள்ளார்.

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்களான ரவீந்திரன் – யோகேஸ்வரி தம்பதியினரின் இளைய புதல்வியான முகுர்த்தனா, பாடசாலைக் காலம் முதல் கல்வி மற்றும் கலைத்துறைகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

கமு/இ,கி,மி,பெண்கள் பாடசாலையில் சாதாரண தரம் வரை கல்வி பயின்று 9ஏ சித்திகளை பெற்ற அவர், பின்னர்

கமு/விபுலானந்தா மத்திய கல்லூரி உயர்தரக் கல்வியைத் தொடர்ந்து பெறுபேறுகளைப் பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார்.

பாடசாலைக் காலத்தில் தமிழ்மொழி மற்றும் இலக்கியத் துறையில் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்திய முகுர்த்தனா, மாகாண மட்டத் தமிழ்த்தின இசைத் தனிப் போட்டிகளில் மூன்று தடவைகள் பங்கேற்று, ஒரு தடவை இரண்டாம் இடத்தையும் இரு தடவைகள் மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளார். இதன்மூலம் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

மேலும், உயர்தரத்தில் கல்வி பயின்ற காலத்தில் தமிழ்த்தினப் போட்டியின் ஐந்தாம் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தையும் வென்றுள்ளார். ஆங்கிலத் தினப் போட்டிகளில் வலய மட்டம் வரை பங்கேற்றதுடன், ஆங்கிலக் கையெழுத்துப் போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

பல்கலைக்கழகக் கல்வியிலும் தனது சிறப்பான திறமையைத் தொடர்ந்து வெளிப்படுத்திய அவர்,தொடர்ந்து மூன்றாம் நான்காம் ஐந்தாம் (Semesters) துறையில் அதிக GPA பெறுபேற்றைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

இதற்காக, ‘இளைதம்பி அம்பிகேராஜா பணப்பரிசு’ உட்படப் பணப்பரிசுகளையும் பெற்றுள்ளார்.

தனது கல்விப் பயணத்தின் ஓர் அங்கமாக இந்தியாவின் சென்னைத் தொழில்நுட்பக் கழகத்தில் Madras) ஆறு மாதகாலப் பயிற்சியையும் (Internship) நிறைவு செய்துள்ளார்.

தற்போது தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றிய அனுபவத்தைத் தொடர்ந்து, ஒப்பந்த அடிப்படையிலான விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றார்.

பாடசாலைக் காலம் முதல் பல்கலைக்கழகம் வரை கல்வி, இலக்கியம் மற்றும் பல்வேறு திறன்சார் துறைகளில் சாதனைகளைப் படைத்து, தற்போது தங்கப்பதக்கத்துடன் முதல் வகுப்புச் சிறப்புப் பட்டத்தையும் பெற்றுள்ள முகுர்த்தனா ரவீந்திரனின் சாதனை, காரைதீவு மண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *