புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க அனுமதிக்க முடியாது!

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும் தலைமுறை (Rata Rakina Parapura) அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் மூலம் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்குவது அரச கடமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு நாட்டில், இச்சம்பவம் பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் காஞ்சன டி சில்வா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌத்த துறவிகளின் கருத்துக்கள் தமது தரப்பின் கருத்துக்களுடன் ஒத்துப்போகாத போது அவர்களைத் தூற்றுவதும், விமர்சிக்கும் போது இழிவுபடுத்துவதும், இறுதியாக அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி துறவற ஆடையின் மீது கை வைப்பதும் தற்போதைய காலத்தில் சாதாரணமான ஒன்றாக மாற்றப்பட்டு வருகின்றது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், ஞானசார தேரர் சட்டத்துக்கு மேலானவர் எனத் தாம் ஒருபோதும் கூறவில்லை என்றும், ஒரு நபருக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு இருக்குமாயின் அது சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

எனினும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் பௌத்த தேரர்களின் துறவற ஆடையை இழிவுபடுத்துவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்துக்கும் அதிகாரம் அளிக்க முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, சிறைச்சாலைத் திணைக்களம் அத்தகையதொரு செயலையே மேற்கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *