ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பான Sri Lanka Pen Club இன் ஆறாவது தேசிய மாநாடு நாளை (17) சனிக்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
“ஆரோக்கியமான குடும்பம்; ஆற்றலுள்ள பெண்ணின் ஆதாரம்” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் இலக்கிய வித்தகருமான கலாபூஷணம் சம்மாந்துறை மஷூறா ஜே.பி தலைமை வகிக்கவுள்ளார்.
பிரதம அதிதிகளாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.என். மைமூனா மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மாநாட்டின் காலை அமர்வில், 65 முஸ்லிம் பெண்களின் கவிதைகளை உள்ளடக்கிய “கடத்தி” கவிதைத் தொகுதியும், பென்கிளப்பின் காலாண்டிதழான அவரி சஞ்சிகையில் வெளியான 25 சிறுகதைகளை உள்ளடக்கிய “அவரி சிறுகதைகள்” தொகுதியும் வெளியிடப்படவுள்ளன.
மேலும், அங்கத்தவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
மாலை அமர்வில், அமைப்பின் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளுக்குப் பங்களிப்புச் செய்த 63 அங்கத்தவர்கள் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதன்போது, நோன்பு காலத்தில் நடத்தப்பட்ட ‘ரய்யானிய வசந்தம்’ வினாவிடைப் போட்டி, ஊடகங்களுக்கு அதிக ஆக்கங்களை எழுதியவர்களுக்கான ‘வெல்லப் போவது யார்?’ போட்டி மற்றும் வருடாந்த ‘புதையல்’ வினாவிடைப் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் பெண் எழுத்தாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் ஒன்றுகூடும் இம்மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்விபரங்களை அமைப்பின் தலைவி கலாபூஷணம் சம்மாந்துறை மஷூறா தெரிவித்துள்ளார்.

