இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் சரத்துக்களுக்கு அமைய, புலம்பெயர் நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள சில தமிழ் நபர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி, தடைகளை நீக்குவதற்கு இந்திய அரசும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கை அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.
ஈரோஸ் கட்சியின் ஊடக மாநாடு மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை (17) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.
1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் மாகாண சபை ஆட்சி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், இதற்காகத் தமிழ் மக்கள் உயிர், உடைமைகள் உள்ளிட்ட பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயுதம் தரித்திருந்த தமிழ் இயக்கங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதும் புலம்பெயர் நாடுகளில் சில தமிழ் நபர்களும் அமைப்புகளும் தடை செய்யப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்றார்.
புலம்பெயர் தமிழர்களிடம் பெருமளவிலான முதலீடுகள் காணப்படுவதாகவும், அவை இலங்கைக்குக் கொண்டுவரப்படுமானால், குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நகரங்கள் மற்றும் கிராமங்களின் அபிவிருத்திக்கு உதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, இலங்கை – இந்திய ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்து, தடைசெய்யப்பட்ட தமிழ் நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுக்கு மகஜர் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இராஜநாதன் பிரபாகரன் மேலும் தெரிவித்தார்.

