பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் ஜூஹூ பகுதியில், பொலிவுட் நடிகர் டைகர் ஷெராப் காரில் சென்று கொண்டிருந்தபோது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மக் கும்பல் ஒன்று அவரை இலக்கு வைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக டைகர் ஷெராப் எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினார். இருப்பினும், காரின் ஓட்டுநர் உட்பட இருவர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொலிஸார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில், இக்கொலை முயற்சி சம்பவத்திற்குப் பிரபல கேங்ஸ்டர் லோரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தற்போது பொறுப்பேற்றுள்ளது.

இதுதொடர்பாக அக்கூட்டத்தைச் சேர்ந்த அனில் பண்டிட் என்பவன் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில் , *”நடிகர் சல்மான் கானுடன் இணைந்து செயல்படுபவர்களுக்கு இதுவே கதி! எங்களின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் சல்மான் கானுடன் இணைந்து நடிக்கும் திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் இதுவே இறுதி எச்சரிக்கை,”* என அச்சுறுத்தல் விடுத்துள்ளான்.

ஏற்கனவே நடிகர் சல்மான் கானைக் கொலை செய்ய திட்டம் தீட்டி வந்த லோரன்ஸ் பிஷ்னோய் கும்பல், தற்போது அவருடன் தொடர்பில் இருக்கும் பிற பொலிவுட் நடிகர்களையும் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியிருப்பது திரையுலகினரிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் இதுகுறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *