காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம்! மேலும் 5 சந்தேகநபர்கள் கைது

காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவம் மற்றும் அது தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், பாணந்துறை வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து குறித்த பிரதேசத்தை மையப்படுத்தி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர் என்பது தற்போதைய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் கல்கமுவ பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் வனவிலங்குகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல் வலைப்பின்னல் ஏதேனும் செயற்பட்டதா என்பது குறித்தும் மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *