ஒன்லைன் நிதி மோசடி – 21 வெளிநாட்டவர்கள் கொழும்பில் கைது!

நாட்டிலிருந்து இணையதளம் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத மோசடிகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டவர்கள் குழுவொன்று கொழும்பு, மருதானை டெக்னிகல் சந்தி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதானை டெக்னிகல் சந்தைப் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடமொன்றில் இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதுடன், அதில் தொடர்புடைய 21 வெளிநாட்டவர்கள் இதன்போது பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 12 சீன நாட்டவர்களும், 6 பங்களாதேஷ் நாட்டவர்களும், மூன்று இந்திய நாட்டவர்களும் அடங்குவர்.

இக்குழுவினர் குறித்த கட்டிடத்தில் இருந்து முன்னெடுத்த ஒன்லைன் மோசடிகளின் தன்மை மற்றும் அவற்றின் வலையமைப்பு குறித்து பொலிஸார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கவின் வழிகாட்டுதலில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *