பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்திற்கான பத்துமாடிக் கட்டட நிர்மாணப் பணிகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த கட்டிட நிர்மாணத்திற்கான ஒப்பந்தக்காரரைத் தெரிவுசெய்வதற்காக தேசிய போட்டி விலைமுறைக் கோரல் நடைமுறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன. இதற்காக மொத்தம் 10 விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
விலைமனுக்களை மதிப்பீடு செய்ததன் பின்னர், உயர்மட்டப் பெறுகைக் குழு மற்றும் பெறுகை மேன்முறையீட்டுச் சபையின் பரிந்துரைகளுக்கு அமைய, குறைந்த விலைமனுவைச் சமர்ப்பித்த Axis Structural (Pvt) Ltd நிறுவனத்திற்கு 1.73 பில்லியன் ரூபாய் (பெறுமதி சேர் வரி நீங்கலாக) பெறுமதியில் ஒப்பந்தத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான யோசனையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

