கல்முனை நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 205ஆவது கொடியேற்ற விழா ஆரம்பம்!

அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 205ஆவது கொடியேற்ற விழா இன்று (10) வெகு விமரிசையாக ஆரம்பமானது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ. அப்துல் அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புனித கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தர்ஹாவின் மினாராக்களில் ஏற்றிவைக்கப்பட்டது.

நாகூர் நாயகம் ஹழ்ரத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகத்தின் நினைவாக நடைபெறும் இவ்விழா, தொடர்ந்து 12 நாட்கள் இடம்பெறவுள்ளது.

இதன்போது புனித மௌலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் றிபாஈ றாதிப் மற்றும் சன்மார்க்கச் சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையவுள்ளதுடன், அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *