ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்ட அச்சு முகம்மது ஹனீதா இன்று (10) சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதன்போது உரையாற்றிய அவர், சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து, நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதாகத் தெரிவித்தார்.
தான் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பிரதிநிதியாக இருந்தாலும், தனது சேவைகள் அந்த வட்டாரத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது எனக் குறிப்பிட்ட அவர், பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வட்டாரங்களிலும் வாழும் மக்களுக்கும் கட்சி பேதங்களுக்கு அப்பால் சமமான சேவைகளை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்தார்.
மேலும், நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் காணப்படும் வீதிகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் பிரதேச சபை உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன், தன்னால் முன்வைக்கப்படும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் அபிவிருத்திப் பிரேரணைகளை அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் கவனத்தில் கொண்டு செயற்படுத்துவதற்கு ஏனைய உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினராகச் செயற்பட்டு வந்த எம்.ஐ. பாத்திமா சாபியா, கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்கத் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அச்சு முகம்மது ஹனீதா நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைய, கடந்த 2026.10.12ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

