மட்டக்களப்பில் மழைக்காலத்திலும் மந்தகதியில் வடிகான் அமைக்கும் பணிகள்!

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் மழைக்காலத்தில், ஏற்கனவே உள்ள வடிகான்களைச் சீரமைத்துச் சுத்தப்படுத்த வேண்டிய சூழ்நிலையில், புதிய வடிகான் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறிப்பாக, இருதயபுரம், ஐந்திபுரம் மற்றும் ஊறணி ஆகிய பகுதிகளில் வீதி வடிகான் பணிகள் மழைக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இதுவரை நிறைவு பெறாமல் அரைகுறையாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.

இதனால் மழைநீர் வீதிகளிலும் குடியிருப்புகளுக்குள்ளும் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வீதிகளை ஊடறுத்துச் செல்லும் வடிகான்களை அமைக்கும் ஒப்பந்த நிறுவனங்கள், பணிகளை முடித்த பின்னர் வீதிகளைச் சரியான முறையில் செப்பனிடாமல் கரடுமுரடாக விட்டுச் செல்கின்றன.

வாகனங்கள் தடங்கலின்றிச் செல்வதற்கு ஏற்றவாறு வீதிகளைச் சீரமைக்கத் தவறுவதுடன், இந்த வேலைகளை உரிய நிறுவனங்களோ அல்லது அரச திணைக்களங்களோ முறையாக மேற்பார்வை செய்வதில்லை என்ற ஆதங்கமும் எழுந்துள்ளது.

மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் இத்தகைய திட்டங்கள் சரியான மேற்பார்வையின்றிச் செய்யப்படுவதால், இறுதியாகப் பொதுமக்களே இதன் பாதிப்புகளைச் சுமக்க வேண்டியுள்ளது.

மேலும், வீதி அமைப்பு அல்லது வடிகான் பணிகளின் போது மாற்று வழிகளை யோசிக்காமல், ஒரே நேரத்தில் அருகருகே உள்ள முக்கிய வீதிகளை மூடி வேலை செய்வது மக்களின் அன்றாடப் போக்குவரத்தைப் கடுமையாகப் பாதித்துள்ளது.

குறிப்பாக, இருதயபுரம் வீதி மற்றும் காளி கோவில் வீதி ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் மூடப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் பணிகள் முடியாததால், அப்பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதைக் கவனத்தில் கொள்ளாமல் அலட்சியமாகச் செயல்படும் அதிகாரிகளின் போக்கிற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களும் மட்டக்களப்பு மாநகர சபையும் உடனடியாகத் தலையிட்டு, ஒப்பந்த நிறுவனங்களின் அரைகுறை வேலைகளை மேற்பார்வை செய்வதோடு, விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் வீதிகளை உடனடியாகச் சீரமைத்துத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *