மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனை பகுதியில் மீண்டும் ஒரு பசு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கால்நடைப் பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கழிமடு அருளன்டவெட்டை குளப்பகுதியில் தேவராசா ஸ்ரீதரனுக்குச் சொந்தமான பசுவே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற இரு பண்ணையாளர்கள், சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடியதைக் கண்டுள்ளனர். மேலும், துப்பாக்கியுடன் நின்ற ஒருவர் தங்களை நோக்கிச் சுட முயன்றதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யச் சென்றபோது அலைக்கழிக்கப்பட்டதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, மகோயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மயிலத்தமடு – மாதவனை பகுதியில் கால்நடைகள் தொடர்ச்சியாகத் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் தமது வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகப் பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, கால்நடைப் பண்ணையாளர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

