சம்மாந்துறைப் பகுதியில் பழுதடைந்த வெங்காயத்தை விற்பனை செய்தமை மற்றும் மருத்துவச் சான்றிதழின்றி உணவைக் கையாண்டமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில், சந்தேகநபருக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் மொத்தம் 10,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
கடந்த 10.11.2026 அன்று பழுதடைந்த வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பொது சுகாதாரப் பிரிவினரால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, 8 கிலோ 250 கிராம் பழுதடைந்த வெங்காயம் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து, சந்தேகநபருக்கு எதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் B அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன், அவர் 50,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பழுதடைந்த வெங்காயத்தை விற்பனை செய்தமை தொடர்பான முதலாவது குற்றச்சாட்டுக்கு 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஆறு மாத சிறைத்தண்டனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன், மருத்துவச் சான்றிதழின்றி உணவைக் கையாண்டமை தொடர்பான இரண்டாவது குற்றச்சாட்டுக்கு மேலும் 5,000 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை MOH அலுவலகத்தின் பொது சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

