கோட்டாபயவின் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு திகதி நிர்ணயம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவின் விசாரணைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

அதனை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வழக்கை அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (25) மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

அங்கு முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதியரசர்கள் குழாம், இந்த மேன்முறையீட்டு மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக அடுத்த வருடம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *