இலங்கை மக்களின் சுமார் 10 சதவீதமானோர் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மற்றும் உரிய சிகிச்சைகள் மூலம் இறுதிக்கட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையை 30 சதவீதத்தால் குறைத்துக் கொள்ள முடியும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாரதூரமான பொதுச் சுகாதார சவாலாக மாறியுள்ள நாட்பட்ட சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்காக சிகிச்சைச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படாது, நோய் தடுப்பு மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறிதல் ஆகியவற்றில் அரசாங்கம் பிரதான கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை சிறுநீரக நோயியல் நிபுணர்கள் சங்கத்தினால் (Sri Lanka Society of Nephrology – SLSON) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘NephCON 2026’ ஏழாவது வருடாந்த விஞ்ஞான ஆய்வு அமர்வின் ஆரம்ப நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றதுடன்அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

