திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் நேரம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவுடன் நீதியரசர்கள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த ஆலோசனையில் மதுரை காவல் ஆணையம் ராஜேந்திரன், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:- இன்று பிற்பகல் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் திருப்பரங்குன்றம் செல்கிறேன்.
நேற்று உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசை மிகக் கடுமையாக விமர்சித்தது. ஆட்சிக்கு வந்த ஆறு மாத காலத்திற்குள்ளேயே, ஒரு சட்டமன்ற உறுப்பினர் கைது, உச்ச நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனம் மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் உள்ள திறன் குறித்த கேள்விகள் என பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துள்ளது.
எந்தத் தீபத்தை ஏற்றக்கூடாது என்று அரசு தடுத்ததோ, அதே தீபம் இப்போது உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுகிறது.
முருகப்பெருமானின் ஆசிகள் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களைச் சென்றடைகின்றன. முருகப்பெருமானின் சக்தி அளப்பரியது; தீபம் ஏற்றுவதைத் தடுக்க நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்திய செயல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.

