மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரிகள் இருவர் கைது

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரையும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் உட்பட 3 பேரை நேற்று(12) இரவு 11 மணியளவில் கைது செய்துள்ளதுடன் 26 லீற்றர் கோடா மற்றும் பெருமளவிலான ஐஸ் போதைப்பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ. பி பண்டார தெரிவித்தார்.

 

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு 11 மணியளவில் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி சஞ்சீவ, போதை மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி பெர்னாண்டோ தலைமையிலான பொலிஸ் குழுவினர் இரு குழுவாகப் பிரிந்து ஊறணிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு அங்கு கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் 26 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களையும் மீட்டனர்.

 

இதேவேளை புதிய எல்லை வீதியில் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் வியாபாரத்துக்காகக் கொண்டுவந்த இரு போதைப்பொருள் வியாபாரிகளை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 8730 மில்லிக்கிராம் மற்றும் 7000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களை மீட்டனர்.

 

இதில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரிகளான இருவரையும்; மூன்று நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *