ஏறாவூர் பிரதேசத்தின் வினைத்திறன் மிக்க எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் துறை சார்ந்த ஒவ்வொரு பிரிவினரின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெற்று செயல்படுத்தும் வகையில் பொறியியலாளர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் இன்று(13) நகர சபை தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் தலைமையில் இடம் பெற்றது.
புதிய சபை அமையப்பெற்றுள்ள நிலையில் முன்னெடுக்கப்படும் சகல அபிவிருத்தித் திட்டங்களையும் பொறியியலாளர்கள் துறைசார்ந்தவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று எமது பிரதேசத்தில் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு அபிவிருத்தித் திட்டங்களை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை கருத்திற் கொண்டு இக்கலந்துரையாடல் இடம் பெற்றது.
காதியார் வீதி புனரமைப்பு, பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும் பிரதான வடிகாண்கள், மழைக்காலங்களில் பிரதான வீதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, வடிகாணுக்கு மேல் கொட்டப்படும் கல்-மண், நீர் வழிந்தோடும் முகமாக தேணாக்கள் புனரமைப்பு செய்தல், நகர சபைக்கு வருமானத்தை அதிகரிக்கும் செயற்பாடுகள்- விடயங்கள் , சிறுவர் பூங்கா பகுதி புனர்நிர்மானம், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்கும் பங்களிப்பு போன்ற விடயங்கள் இக்கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் நகரசபை பிரதித் தவிசாளர் ஜே. கஜேந்திரன், உறுப்பினர்களான எம்.ஆர் நஸீர், எஸ்.எம் ஜப்பார், ஏ.எம் உவைஸ் அல் ஹபீழ், நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம் ஹமீம், எஸ்.எல். காலிதீன், எம்.ஏ.சீ.எச் றஸ்வி, ஏ.எஸ்.எம் இர்ஷாத், எம்.யூ.எம் இஜாஸ், ஏ.எல்.எம் பிர்தௌஸ் மற்றும் ஏ.ஏ லுத்துப் றஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.


