அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின்படி கல்முனை ஸாஹிரா கல்லூரி குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்து, கல்முனை கல்வி வலயத்தில் 8வது இடத்தைப் பெற்றுள்ளது.
இப்பாடசாலை 79.3% உயர்தர தகுதி வீதத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு 18வது இடத்தைப் பெற்று 77.0% உயர் தர தகுதி வீதத்தை அடைந்ததிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
உயர் தரத்துக்கான தகுதி வீதத்தில் ஏற்பட்டுள்ள இந்த 2.3% அதிகரிப்பு இப் பாடசாலையின் நன்கு திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட பாடவிதான அமுலாக்கத்தின் நேர்மறையான தாக்கத்தை கோடிட்டுக் காட்டுகின்றது.
இந்த மகத்தான சாதனைக்காக இப் பாடசாலை சமூகம் அதிபர் எம்.ஐ.ஜாபிர்க்கும் அர்ப்பணிப்புள்ள ஆளணியினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
கல்முனை கல்வி வலயத்தில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்த ஒரேயொரு ஆண்கள் பாடசாலை ஸாஹிரா கல்லூரியே என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஒரு ஆண்கள் பாடசாலை என்ற வகையில், இந்த குறிப்பிடத்தக்க வெற்றி ஒரு சாதனையாகக் கருதப்படுவதுடன் இத்தகைய சவாலான பணியின் தன்மையையும், பாடசாலையின் சிறப்பான முயற்சிகளையும் எடுத்துக்காட்டுகிறது.
இம் மாணவர்களை வாழ்த்திப் பாராட்டுவதோடு, இச் சாதனையை புரிவதற்கு ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கிய கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம், இதற்காக மாணவர்களை வழிப்படுத்தி அர்பணிப்புடன் அரும்பணி புரிந்த தரம் 11 பிரிவின் பகுதி தலைவர் ஏ.எச்.எம். றிஸான், உதவி பகுதித் தலைவர் ரீ.எஸ்.அஜ்மல் ஹுசைன், அப்பிரிவின் வகுப்பாசிரியர்கள், கற்பித்த ஆசிரியர்கள், பிரதி, உதவி அதிபர்கள், மேலதிக கருத்தரங்குகளில் கற்பித்த ஆசிரியர்கள், உளவியல் துறை விரிவுரையாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

