மீன்பிடி தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மீன் பிடி பிரதியமைச்சர் ரத்ண கமகே பங்கேற்புடன் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனெத்தி தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளீதரன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள பழைய மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று(16) திகதி பி.ப 2.30 மணி முதல் குறித்த விசேட கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது மீன் பிடி பிரதியமைச்சர், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இரா.சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் மற்றும் எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளான மீனவர் இறங்குதுறை, மீனவர்கள் பயன்படுத்தும் வீதிகள் புணரமைப்பு, சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கைகளுக்கான தீர்வு, நன்னீர் மீன் பிடி வளப்பு, வெளிச்ச கோபுரங்கள் அமைத்தல், ஆள் கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உள்ளிட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் மேலும் பல விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், சில பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இதன் போது பிரதியமைச்சர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆகியோரினால் முன்வைக்கப்பட்டதுடன், மேலும் சில பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எதிர்வரும் காலங்களில் சரி செய்து கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் றுக்சான் குருஸ், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


