நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதில்லை எனக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது திருகோணமலை முத்துநகரில் மக்களின் விவசாய காணிகள் இந்திய நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்திருக்கிறது.
அதேபோன்று டொக்யாட்டையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் தான் இவ்வாறு செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறததென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் இன்று(31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவிக்கு வந்த பின்னர் இதுவரை 6நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அந்த நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார். ஆனால் அரசாங்கம் இவ்வாறு வெளிநாடுகளுடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் எதுவும் நாட்டுக்கு வெளிப்படுத்தியதில்லை.
குறிப்பாக இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் அரசாங்கம் அதுதொடர்பில் எந்த கருத்தையும் தெரிவிப்பதில்லை. அரசாங்கம் இவ்வாறு இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை மறைப்பதாக இருந்தால், அதில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற விடயங்கள் இருக்க வேண்டும். அதனாலே அதனை வெளியிட அச்சப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

