கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (கலாசாரப் பிரிவு) சதீஷ் கமகேவை எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
போதைப்பொருள் வர்த்தகர்கள், குற்றக்கும்பல் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சேவைகளைப் பெற காவல்துறைக்கு வந்த பொதுமக்களிடமிருந்து ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவினை கையூட்டலாக பெற்ற சம்பவம் தொடர்பாக சதீஷ் கமகே அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்த சந்தேக நபருக்குத் தெரிந்தே திறக்கப்பட்ட மற்றொரு நபரின் மூன்று வங்கிக் கணக்குகளில் குறித்த பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அண்மையில் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தது.

