கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மக்களின் பாவனைக்கு கையளிப்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
இதனையடுத்து நேற்று(19) பி.ப 5:00 மணிக்கு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கும் விஜயம் செய்திருந்தார்.
குறித்த விஜயமானது தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கரையோரப்பிராந்திய பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான ஜனாப் ஆதம்பாவா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேசக் கிளை ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
அமைச்சரை திருக்கோவில் ஆதாரவைத்தியசாலை நிர்வாகத்தினர் அமோகவரவேற்பு அளித்து வரவேற்றனர்.
மேலும் அமைச்சர் வைத்தியசாலை சூழல் மற்றும் வைத்தியசாலை வைத்தியப்பிரிவுகளைப் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஜனா. மசூத் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினரின் ஏற்பாட்டில் வைத்தியசாலை அபிவிருத்தி சார்ந்த விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் வைத்தியசாலையில் காணப்படும் முக்கிய தேவைகள் பற்றியும் ஆராயப்பட்டதுடன் வைத்தியசாலையில் காணப்படும் குறைப்பாடுகள் மற்றும் வைத்தியத் தேவைகள் குறித்து வைத்திய அத்தியட்சகர் ஏ.பி.மசூத் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி ஜெகசுதன் ஆயோரினால் உரை நிகழ்த்தப்பட்டது.
மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், சில குறைபாடுகள் வைத்தியத்தேவைகள் விரைவில் அரசாங்கம் ஊடாக சரி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினரால் சுகாதார அமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவருமான ஜனாப் அதாம்பாவா, பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சசிகுமார், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.மசூத், தேசிய மக்கள் சக்தியில் திருக்கோவில் பிரதேச குழுவினர், வைத்தியசாலை வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


