நுவரெலியாவில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதி

நுவரெலியா பிரதேச செயலகத்தில் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்காக வரும் பொதுமக்கள், அங்கு நிலவும் சேவைச் சிரமங்களால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு சென்றால் “ஏன் பிறந்தோம் என்றளவிற்கு மனம் நோகும் மக்கள்” என்று வர்ணிக்கக்கூடிய நிலைமை அங்கு நிலவுகிறது.
பெரிய செயலகமாயினும், பொதுமக்களுக்கு சேவையை வழங்க மட்டும் இரண்டு கணினிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஆவணங்கள் பெறுவதற்கான பணிகள் மந்தமாக நடைபெறுகின்றன. பல மணிநேரங்கள் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய சூழலில், மக்கள் வெயிலும் மழையும் பொருட்படுத்தாமல் துன்புறும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் அடிப்படை வசதிகள் இன்றி வெளியில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரு சீரமைக்கப்பட்ட காத்திருப்பு அறை, இருக்கை வசதி, அடிப்படை பாதுகாப்பு போன்ற எளிய ஏற்பாடுகளும் இல்லாதமை, மக்கள் மனதில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கண்டனம் தெரிவித்து, “பொதுமக்களின் அடிப்படை ஆவணங்களைப் பெறும் இடமாக இருக்கும் பிரதேச செயலகத்தில் இவ்வாறு அலட்சியம் காட்டப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்களுக்கு நட்பு சேவையை வழங்க உடனடி நடவடிக்கை அவசியம்” என வலியுறுத்தினர்.
பொதுமக்கள், அதிகாரிகள் அவசரமாக கவனம் செலுத்தி, இச்சேவையை எளிதாக்குவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *