அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தில் அமைந்துள்ள நாவலடி வட்டையில் முஸ்லிம் விவசாயிகள் 100 ஏக்கர் காணியில் 40 வருட காலமாக விவசாயம் செய்து வந்தனர்.
முஸ்லிம்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் காணியில் 21 முஸ்லிம் விவசாயிகளுக்கு மட்டும் இரண்டு ஏக்கர் விகிதம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
மிகுதி விவசாயிகள் தங்களின் காணிக்கான உத்தரவுப்பத்திரங்களை வழங்குமாறு விண்ணப்பம் செய்து இருக்கின்றனர். இந்த நிலையில் 40 வருட காலமாக விவசாயம் செய்து வந்த முஸ்லிம் விவசாயிகளை விவசாயம் செய்ய வேண்டாம் என தடை விதித்துவிட்டு 21 முஸ்லிம்களின் காணிகளுக்குள் வெளிநபர்களை கொண்டு வந்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வது பெரும் அநீதியாகும்.
இந்த விடயத்திற்கு மாவட்ட மட்டத்தில் தீர்வு காண்பதற்கு பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் எதுவித பலனும் இல்லாத நிலை தொடர்கிறது. எனவே நாவலடிவட்டை முஸ்லிம்களுக்கான காணிக்குள் வெளிநபர் விவசாயம் செய்வதனை இடைநிறுத்தி முஸ்லிம்கள் 21 பேரின் மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட உத்திரபத்திரங்களுக்கான காணிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் திரு. வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக பிரதி அமைச்சர் தமன பிரதேச செயலாளரிடம் விளக்கமளிக்குமாறு கேட்டார். நாவலடி வட்டையில் 21 முஸ்லிம்களுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் 2 ஏக்கர் வீதம் உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீண்டகாலமாக விவசாயம் செய்யப்படாத நிலையில் இக்காணிகளுக்குள் வெளி விவசாயிகள் விவசாயம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ முஸ்லிம் விவசாயிகள் 21 பேருக்கு காணி உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்ட நிலையில் ஏன் வெளிநபர்கள் வந்து விவசாயம் செய்ய வேண்டும்? என பிரதேச செயலாளரிடம் பிரதி அமைச்சர் கேட்டார்.
முஸ்லிம்களுக்குரிய காணிகளுக்குள் தான் வெளிநபர்கள் விவசாயம் செய்ய விரும்புவதாகவும் தமன பிரதேச செயலாளர் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்ட 21 முஸ்லிம் விவசாயிகளுக்கான காணிக்குள் வெளிநபர்கள விவசாயம் செய்ய வேண்டும், 21 முஸ்லிம் விவசாயிகளுக்கு வேறு காணி வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். ஆனால் முஸ்லிம் விவசாயிகள் 21 பேரும் தங்களுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட காணிகள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். எனவே, முஸ்லிம்களுக்குரிய உத்தரவுப்பத்திரங்களுக்கான காணிகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
நாவலடி வட்டை காணிப் பிரச்சினை தொடர்பாக இருபகுதியினரையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து விசேட கூட்டம் ஒன்றை நடாத்தி தீர்வு காண்பதாக தீர்மானிக்கப்பட்டது.

