கிளிநொச்சியில் “உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்” வீட்டுத்திட்டத்தின் வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் – 2025” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 11 வீடுகள் இன்று(05) பயனாளிகளிடம் சம்பிரதாயப்பூர்வமாக கையளிக்கப்பட்ட.
இன்று ஒக்டோபர் 05ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் அலரி மாளிகையில் உலக குடியிருப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக குறித்த வீடுகள் இவ்வாறு பயனாளிகளிடம் கையளிக்கப்படுகின்றன.
இந் நிகழ்வில் யாழ் – கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கலந்து கொண்டு குறித்த வீடுகளை பயனாளிகளிடம் சம்பிரதாயப்பூர்வமாக கையளித்திருந்தார்.
குறித்த வீட்டுத் திட்டத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை செயற்படுத்துகிறது. இதன்போது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் இரண்டு வீடுகளும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் மூன்று வீடுகளும், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் இரண்டு வீடுகளும், பூநகரி பிரதேச செயலர் பிரிவில் நான்கு வீடுகளும் கையளிக்கப்பட்டன.
கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுகளில் அமைக்கப்பட்ட வீடுகளின் திறப்பு விழாவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டிருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் குறித்த பிரதேச செயலகங்களின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்பாளர், மாவட்ட அபிவிருத்திக் குழு அலுவலக இணைப்பாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கணக்காளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் உள்ளிட்ட கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *